தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்ற இயற்பெயரை கொண்ட இவர், ஈரோடு மாவட்டம், காங்கயம் அருகே மேலப்பாளையத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய மாவீரராக திகழ்ந்தார். பல்வேறு துணிச்சலான போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்து, போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத்தந்தார்.

தீரன் சின்னமலை, மைசூர் அரசர் திப்பு சுல்தானுடன் இணைந்து, கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்து சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் பங்கேற்று வெற்றிகளை பெற்றார். 1799இல் திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின், கொங்கு நாட்டில் ஓடாநிலை கோட்டையை கட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக கெரில்லா போர்முறையில் வெற்றிகரமாக போரிட்டார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. ஃபோனில் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்..!
1801இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802இல் ஓடாநிலையிலும், 1804இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களை தோற்கடித்தார். மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தை பறித்து ஏழைகளுக்கு வழங்கியதால், “சின்னமலை” என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களால் சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டு, 1805இல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். இவரது வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில், சென்னை கிண்டியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசு 2005இல் இவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது. தீரன் சின்னமலையின் வீர வரலாறு, இன்றும் இளைஞர்களுக்கு உத்வேகமாக விளங்குகிறது.

இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் நாளை (3.8.2025) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படும் திருவுருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: முதல்வருக்கு எதுவும் ஆகல.. அவரு நல்லா இருக்காரு.. அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்..!