தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். வழக்கமான காலை நடைபயிற்சியின் போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும், திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மருத்துவமனை அருகே குவிந்துள்ளனர்.
இதையும் படிங்க: அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. மருத்துவர்கள் அறிவுறுத்தியது என்ன..?
முதலமைச்சர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜாவை திமுகவில் இணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதன்பின் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியதும், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர் விரைவாக குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரின் திடீர் மருத்துவமனை அனுமதியால், நாளை திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பயணத் திட்டங்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்துவிட்டு வெளியே வந்த மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு ஒன்றும் இல்லை, அவர் நலமுடன் இருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் அவர் வீடு திரும்பலாம். இன்று மாலை கூட டிஸ்சார்ஜ் ஆகலாம், மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தார். இதனைக்கேட்ட திமுக தொண்டர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின்.. மருத்துவர்கள் அறிவுறுத்தியது என்ன..?