நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமானத் திரைப்படமான 'அமர்க்களம்' தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி (Re-release) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை ஒட்டி நடைபெற்றக் கொண்டாட்டத்தின் போது, அஜித்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய இயக்குனர் சரண், அஜித் ஏன் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தார் என்பது குறித்த சுவாரஸ்யமானப் பின்னணியைப் பகிர்ந்துள்ளார்.
அஜித்தைப் பொறுத்தவரை அவர் தனது ரசிகர்களை வெறும் ரசிகர்களாகப் பார்க்காமல், அவர்களை மிகவும் மதிக்கக்கூடியவர். அமர்க்களம் படம் வெளியான அன்றைய இரவே சுமார் 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. அந்த அளவிற்கு அவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்பு இருந்தது எனச் சரண் நினைவு கூர்ந்தார்.
ரசிகர் மன்றங்கள் பெருகிய போது, அவற்றுக்குள் தேவையற்றப் பதவிச் சண்டைகளும், அரசியல் மோதல்களும் உருவாவதை அஜித் கவனித்துள்ளார். மன்றப் பதவிகளுக்காக ரசிகர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதும், சண்டையிட்டுக் கொள்வதும் அஜித்திற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் அவர்களுக்குள் மோதிக்கொள்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. இதில் எனக்கு உடன்பாடில்லை என்று அவர் என்னிடம் பலமுறை கூறியுள்ளார் எனச் சரண் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது பேடிஎம் பேங்க்! உரிமத்தை முழுமையாக ரத்து செய்து ரிசர்வ் வங்கி அதிரடி!

ரசிகர்கள் தங்களது குடும்பம், வேலை மற்றும் எதிர்காலத்தைக் கவனிக்க வேண்டும் என்பதே அஜித்தின் விருப்பமாக இருந்தது. ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும், அவர்களுக்குள் எந்த மோதலும் இருக்கக் கூடாது என்று சொல்லித்தான் அவர் தனது அதிகாரப்பூர்வமான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார் எனச் சரண் விளக்கமளித்தார். 2011-ஆம் ஆண்டு தனது 40-வது பிறந்தநாளின் போது அஜித் வெளியிட்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையை, அவர் சொல்லச் சொல்லத் தான்தான் எழுதினேன் என்பதையும் சரண் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ரசிகர் மன்றங்களைக் கலைத்து 15 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், அஜித்தின் மீதான ரசிகர்களின் அன்பு குறையவில்லை என்பதை 'அமர்க்களம்' ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் நிரூபித்துள்ளன. மன்றங்கள் இல்லாவிட்டாலும், அஜித்தின் கொள்கைகளைப் பின்பற்றி ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபடுவதே அவருக்குப் பெருமை எனச் சரண் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
திரையுலகில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே, தனது பிம்பத்தை விட ரசிகர்களின் நன்மையே முக்கியம் என முடிவெடுத்த அஜித்தின் இந்தச் செயல் இன்றும் பலராலும் வியந்துப் பாராட்டப்படுகிறது.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!