திமுக எம்பி கனிமொழி பெருந்துறையில் காணாமல் போன செவிலியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் செஞ்சியில் காணாமல் போன சிறுமி விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெருந்துறையில் காணாமல் போன செவிலியர் ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.மறுபுறம் செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும் குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கனிமொழி கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாதக கார்த்திகா கைதால் வெடிக்கும் பிரச்சனை..! சர்க்கஸ் அரசாங்கம்.! கண்டித்த உதயநிதி..!!
பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே.? 9 நாட்களாக வேடிக்கை பார்ப்பதா.? திமுக மகளிரணி ஆவேசம்.!!