திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன் (வயது 50). சமீபத்தில் இவரது பாரை அதிகாரிகள் மூடினர். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது செல்போனில் அவர் பேசி பதிவு செய்த வீடியோ இணையத்தில் வெளியானது.
அந்த வீடியோவில் பாலகிருஷ்ணன், 'எனது மரணத்துக்கு காரணம் டிஎம் (டாஸ்மாக் மாவட்ட மேலாளர்), மற்றும் திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அதே பிரிவு ரைட் டர். நாங்க ரொம்பநாளா நல்லாதான் தொழில் செய்து கொண்டிருந்தோம். ஆனால், மாதந் தோறும் கடைக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கணும், கேஸ்க்கு ஆள் கொடுக்க சொல்லி பாலகிருஷ்ணன் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார்.

பணமும் ஆளும் கொடுத்தாலும், குண்டாஸ் கேஸ் போடுவேன்னு மிரட்டிகிட்டே இருக்காங்க. வேண்டுமென்றே என்னுடைய கடைக்கு மட்டும் டார்ச்சர் கொடுத்து மிரட்டி பூட்டிவிட்டனர். நான் வேலை செய்யும் கடையில் நாள் ஒன்றுக்கு ரூ.23 ஆயிரம் (பாட்டில் களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதன் மூலம் மட் டும்) எக்ஸ்சஸ் வருமானம் கிடைக்கிறது.
இதையும் படிங்க: சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்.. விசாரணை வளையத்தில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்..!
இந்த வருமானமும் இன்ஸ்பெக்டர் எடுத்துக் கொள்கிறார். இதேபோல எல்லா கடைக்கும் கணக்கு போட்டு மாதம் ரூ.20 லட் சம் பணம் வாங்கி கொள்கிறார். இதில் 'டிஎம்'க்கு பங்கு போகிறது. இப்படி பணத்தை வாங்கிக் கொண்டு கல்லாவை நிரப்பிவிட்டு டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது நாங்கள் இல்லை அதிகாரிகள்.

என் உழைப்பை உறிஞ்சி, அவர்கள் பெரிய மனிதர்கள் போல வாழ்ந்துட்டு இருக்காங்க. நான் வட்டிக்கு வாங்கி பணத்தை கொடுத்துட்டு, மனஉளைச்சலில் இருக்கிறேன். இன்ஸ்பெக்டருக்கு நான் பணம் கொடுத்ததற்கு வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதுபோன்ற அதிகாரிகளின் சொத்து மதிப்பை தயவு செய்து கணக்கிட வேண்டும் என்று ஆதங்கத்தோடு பேசியிருந்தார்.
வீடியோ வைரலான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலகிருஷ்ணன், நேற்று முன்தினம் மாலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நான் வாய் தவறி தவறுதலாக அதிகாரிகளையும், போலீசார்களையும் பேசிவிட்டேன். இதில் வேறு ஏதும் உள்குத்து கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் கொள்ளை மூலம் அமைச்சர்களின் கஜானா நிரம்புவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனம், தமிழக மக்களை போதையில் இருப்பதையும், அவர்கள் செலவில் திமுக லாபத்தை ஈட்டுவதையும் குறிக்கோளாக கொண்டு உள்ளது. ஏராளமான சட்டவிரோத பார்கள் மூலமும், கணக்கில் வராத பில்கள் மூலமும் ஒவ்வொரு கடையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் வருகிறது. இதன்மூலம் அமைச்சர்களின் கஜானாவில் பல ஆயிரம் கோடி சேர்கிறது.

டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர், அதிகாரிகளின் டார்ச்சரை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, ஏழைகளை கொள்ளையடிப்பதை நிறுத்துவதற்குள் உங்கள் அரசு இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கும் என்றும் அண்ணாமலை கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை கையில் சிக்கிய குடுமி..! 2 நாள் ரெய்டால் ஆட்டம் காணும் டாஸ்மாக் ஊழல்..!