சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானக் கொள்முதலில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடைபெற்றதாகத் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த வாரம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் வீடு, எஸ்என்ஜே நிறுவனம், தொழிலதிபர் தேவக்குமார் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நண்பராக அறியப்பட்டு வரும் ரத்தீஷ் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாகனின் வீட்டின் அருகே வாட்ஸ்அப் உரையாடல் தொடர்பான காகிதங்கள் கிழிந்த நிலையில் இருந்ததாகவும், தொழில் அதிபர் ரத்தீஷ் என்பவருடன் நடந்த உரையாடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.டாஸ்மாக் மேலாண் இயக்குனருடன் ரத்தீஷ் தொடர்பில் இருந்ததாகவும், டாஸ்மாக் டென்டர்களில் அவர் தலையீடு இருந்ததாகவும் அமலாக்கத்துறை விசாரணை தெரிவித்துள்ளது.இதுபோல் திரைப்படத் தயாரிப்பாளரும், டான் பிக்சர்ஸின் உரிமையாளருமான ஆகாஷ் பாஸ்கரனும் டாஸ்மாக் விவகாரத்தில் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை கையில் சிக்கிய குடுமி..! 2 நாள் ரெய்டால் ஆட்டம் காணும் டாஸ்மாக் ஊழல்..!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தாரணியை திருமணம் செய்தவர்தான் ஆகாஷ் பாஸ்கரன். கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பலவேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ஆகாஷ் பாஸ்கரனின் தந்தை சேலத்தின் PRR ஸ்வர்ண மாளிகை என்கிற நகை கடையை நடத்தி வருகிறார். இதுதவிர்த்து வேலவன் டிரான்ஸ்போர்ட் என்கிற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் ஆகாஷ், தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல், பாவக்கதைகள் ஆகிய படங்களிலும் விக்னேஷின் சிவனின் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி , சிம்பு நடிக்க இருக்கும் எஸ்.டி.ஆர் 49 , அதர்வா நடிக்கும் இதயம் முரளி ஆகிய படங்களை டான் பிக்ச்சர்ஸ் அடுத்தடுத்து தயாரித்து வருகிறது.

குறுகிய காலத்தில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான படங்களை தயாரிப்பது சர்ச்சை ஆனது. பட தயாரிப்பிற்காக சட்டவிரோத பணபரிமாற்றத்தின் ஆகாஷ் பாஸ்கரன் ஈடுபட்டாரா என்கிற சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாக அமலாக்கத் துறையினர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், ஆகாஷ் பாஸ்கரனுக்கு இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

துரைராஜ் செல்வராஜ் என்ற தொழிலதிபருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரும் ஆஜர் ஆகவில்லை. ஆகாஷ் பாஸ்கரன் ஆஜர் ஆகாத நிலையில், அவர் எங்கு உள்ளார்? என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. அவர் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரின் வெளிநாட்டுப் பயண விவரங்களையும் அமலாக்கத்துறை சேகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்ரன் வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது சிக்கிய டைரியில் பண பரிமாற்றங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை திரைப்படத்திற்கான நடிகர் தனுஷிற்கு ரொக்கமாக 40 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. பராசக்தி படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் 25 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும், சிம்பு நடித்து வரும் அவரின் 49வது படத்திற்காக ஆகாஷ் பாஸ்கரன் 15 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரொக்கமாக பெரும் தொகை கைமாறியதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றி உள்ள நிலையில் தற்போது நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் , மற்றும் சிம்பு ஆகிய மூவரின் பெயரையும் அமலாக்கத்துறை விசாரணை பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை கையில் சிக்கிய குடுமி..! 2 நாள் ரெய்டால் ஆட்டம் காணும் டாஸ்மாக் ஊழல்..!