தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து, சமீபத்திய தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலைமை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் வரும் என எச்சரித்தார். அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு காலத்தில் கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் அவரின் வருகையின் போது பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து குடும்பத்துடன் வரவேற்றதை சுட்டிக்காட்டினார்.
திமுக ஆட்சியில் ஸ்டாலினோ, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினோ பாஜக, மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட எதிர்ப்பாகப் பேசவில்லை. ஆளுநரைப் பற்றி மட்டும் விமர்சித்து வந்தனர். இதனால் திமுக ஆட்சி பாஜகவின் கொத்தடிமையாகவே இயங்கியது என அவர் குற்றம்சாட்டினார். மாறாக, தவெக தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே பாஜகவைக் கொள்கை எதிரியாக அறிவித்து, கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என உறுதியாக அறிவித்ததை நினைவுபடுத்தினார்.
திமுகவும் அதிமுகவும் பாஜக உதவியுடன் ஆட்சி அமைக்க முயன்றதை விமர்சித்த அவர், உதயநிதி அரசியல் கத்துக்குட்டியைப் போலப் பேசுவதாகக் குறிப்பிட்டார். தவெக காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தாலும் கொள்கை சமரசம் இல்லை என தெளிவாக அறிவித்து வருவதால், அத்தகைய தெளிவான நிலையைப் பார்த்துப் பேச யாருக்கும் அருகதை இல்லை என்றார்.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் முட்ட பரோட்டா..! தாராபுரத்தில் வீச்சு பரோட்டா..! கிண்டலடித்த அமைச்சர் நிர்மல் குமார்.!!

எஸ்ஐஆர் முறையை தமிழகம் முழுவதும் எதிர்த்துப் போராடிய ஒரே கட்சி தவெக எனவும், அதில் தவறுகள் இருப்பதாக விஜய் சுட்டிக்காட்டியதையும் அவர் நினைவூட்டினார். அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் போராட்டம் நடந்ததாகவும், எஸ்ஐஆர் இல்லாதிருந்தால் தவெக 120 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் எனவும் தெரிவித்தார்.
தாராபுரம் போன்ற அதிமுக கோட்டைகளில் அக்கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக திமுகவுடன் கூட்டணி முயற்சியால் தனது உண்மையான வாக்காளர்களை இழந்ததாகக் குறிப்பிட்டார்.
அதிமுக வாக்காளர்கள் தவெகவின் மீதும் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்ததால், வாக்குகள் பெருமளவில் மாறியுள்ளதாகவும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெக வெற்றிபெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பெற்றதை திமுக பெரு வெற்றியாகக் காட்டினாலும், அதிமுகவுக்கு ஏற்பட்ட நிலைமை விரைவில் திமுகவுக்கும் ஏற்படும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவைக் காப்பாற்றுங்கள்..! லெட்டர் பேட் கட்சி ஆக்கிய EPS... அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்.!!