யாகப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் (45) மற்றும் அவரது இரண்டாவது மனைவி தீபிகா ஆகிய இருவருமே இந்தக் கொலை வெறித் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாயாண்டி ஜோசப் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஏசுதாஸ், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்று மாலை ஏசுதாஸ் நத்தம் சாலையில் உள்ள ஆர்.எம்.டி.சி (RMTC) நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஏசுதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏசுதாஸின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டிருந்த வேளையில், மற்றொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
ஏசுதாஸின் இரண்டாவது மனைவியான தீபிகா, அவர்களது வீட்டின் முன்பே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. ஒரே நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் திண்டுக்கல் நகரையே அதிர வைத்துள்ளது. போலீசார் இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாயாண்டி ஜோசப் கொலைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துச் தனிப்படை அமைத்துப் போலீசார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த பாய்ச்சலுக்கான 8 அறிவிப்புகள்… திண்டுக்கல்லில் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…!
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் முதல்வர்... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்...!