தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை ஆதரித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை இரு தொகுதிகளிலும் அனல் பறக்கும் சூறாவளித் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே உச்சக்கட்ட அனலை எட்டியுள்ளது. இரு தொகுதிகளையும் மீண்டும் தக்கவைத்துத் தனது பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் அதிமுக தீவிர களப்பணியில் இறங்கியுள்ளது.
கழகத்தின் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பானுமதி ஆகியோரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் களமிறங்கி வாக்காளர்களைச் சந்திக்க உள்ளார்.
இதையும் படிங்க: ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!
இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையிலிருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயண அட்டவணை முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் செப்டம்பர் 24 (வியாழக்கிழமை), செப்டம்பர் 25 (வெள்ளிக்கிழமை) மற்றும் பிரச்சாரத்தின் இறுதி நாளான அக்டோபர் 3 (சனிக்கிழமை) ஆகிய 3 தினங்கள் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
அதேபோன்று, திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வரும் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை), செப்டம்பர் 28 (திங்கட்கிழமை) மற்றும் அக்டோபர் 2 (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 தினங்கள் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வேனில் சென்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கழகப் பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள குறிப்பிட்ட வழித்தடங்கள், பிரச்சார முனைகள் மற்றும் பொதுக்கூட்ட விவரங்கள் விரைவில் விரிவாக வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளரின் இந்த முக்கியப் பிரச்சாரப் பயணத்திற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் போர்க்கால அடிப்படையில் சிறப்பாகச் செய்ய வேண்டும் எனத் தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!