கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான வைஷ்ணவிக்கு, திமுக மாணவரணியின் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. சுமார் ஓராண்டுக்கு முன்பு தவெகவில் இருந்து திமுகவில் இணைந்த இவர், சமூக ஊடகங்களில் திமுக கொள்கைகளை வலியுறுத்தி பேசி வரும் இளைஞர்களுக்கு பொறுப்பு அளிக்க வேண்டும் என்ற தலைமையின் முடிவின் விளைவாக இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
வைஷ்ணவி தவெக தொடங்கப்பட்ட ஆரம்பக் காலத்திலேயே விஜய்க்கு ஆதரவான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரவலான கவனத்தைப் பெற்றார். எனினும் மாவட்டச் செயலாளருடனான மோதல் காரணமாக அக்கட்சியை விட்டு வெளியேறிய அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அழைப்பை ஏற்று திமுகவில் இணைந்தார். இணைந்த பிறகு ஊடகங்களில் ஓரளவு முக்கியத்துவம் பெற்றதோடு, உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது மகளிர் மத்தியில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. திமுக கொள்கைகளை முன்னிறுத்தி தவெகவை விமர்சித்த அவரது பதிவுகள் தமிழ்நாடு முழுவதும் டிரெண்டாக மாறியது. கட்சிக்குள்ளேயே மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தள்ளிப்போடப்பட்டிருந்தாலும், இளைஞர்களுக்குப் பொறுப்பு வழங்க வேண்டும் என்பதில் திமுக தலைமை தெளிவாக உள்ளது. சமூக ஊடகங்களில் கட்சி நிலைப்பாட்டைப் பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற முடிவு, திமுக இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!
வைஷ்ணவிக்கு செந்தில் பாலாஜியின் ஆதரவு இருப்பதால் இந்த நியமனத்தில் எந்தத் தடையும் இல்லை எனக் கருதப்படுகிறது.அதேநேரம், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது நியாயமானதா என்ற கேள்விகளும் சில தரப்பினரிடம் எழுந்துள்ளன.
ஆனால், அவர் தவெகவிலேயே தொடர்ந்திருந்தால் எம்.எல்.ஏ.வாகக்கூட உயர்ந்திருக்க வாய்ப்பு இருந்தது; திமுகவுக்கு வந்ததால் அந்த வாய்ப்பை இழந்தார் என்ற செண்டிமெண்ட் கட்சிக்குள்ளேயும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வைஷ்ணவிக்கு விரைவில் பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்பது உறுதியாகி வருகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு விவகாரம்... 2 பேர் அதிரடி கைது..! சாட்டையை சுழற்றும் விஜய் அரசு..!!