திருப்பூரில் இளம்பெண் ரிதன்யா, கணவன் வீட்டாரின் கொடுமையால் தற்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு வரதட்சணை கொடுமை புகார் வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்கள் குறித்து யூடியூபில் ரிவ்யூ செய்து வீடியோ வெளியிட்டு வருபவர் சுதர்சன். இவர் முதலில் டெக் பாஸ் என்ற யூடியூப் சேனலில் இருந்தார். தற்போது டெக் சூப்பர் ஸ்டார் என்ற சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் விமலாதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திக்கொண்டார். விமலாதேவி, மருத்துவருக்குப் படித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தபோது சுதர்சன் அவருக்கு அறிமுகமாகி உள்ளார்.

இருவரும் காதலித்து பெற்றொர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை வளையாபதி திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, விமலா தேவியின் பெற்றோர் 30 பவுன் தங்க நகையும், ரூபாய் 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பான சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர். சுதர்சன் சொந்தமாக வீடு கட்டும் போது விமலா தேவியிடம் 30 பவுன் நகையை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. வீடு கட்டி புது வீட்டிற்கு குடிபோன நிலையில், வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.,யில் மீண்டும் ஒரு சம்பவம்... பாதிக்கப்பட்ட மாணவி புகார்; முன்னாள் காதலனை தூக்கிய போலீஸ்!!

இதையடுத்து, சுதர்சனின் பெற்றோர், மருமகளிடம் வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சுதர்சன் மற்றும் அவர் பெற்றோர் மீது தேனி மகளிர் காவல் நிலையத்தில், சுதர்சனின் மனைவி விமலா தேவி வரதட்சணை புகார் அளித்துள்ளார். அதில், டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு கொடுக்குற? வீட்டுக்கே பத்தல.. இன்னும் 20 பவுன் நகை கொண்டு வந்தா தான் வீட்டில் வைத்திருப்போம் என்று கூறி விமலாதேவியை சுதர்சனின் பெற்றோர் மிரட்டியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.10 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு 30 பவுன் நகையை விற்று மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் தான் இங்கு வாழ முடியும் என்று அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுதர்சன், அவரது தாயார் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சொத்து விற்க பாஜகவினரை நாடியது ஒரு குத்தமா? ஆட்டயப்போட்டு மாட்டிகொண்ட சசிகலா புஷ்பா!! நடந்தது என்ன?