திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங்கு ரோடு ஏவிபி பள்ளி அருகே நேற்று போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பெண் கதறி அழுவதை அளித்த போலீசார் ஆட்டோ அருகே சென்று பார்த்தபோது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்திற்காக இ எஸ் ஐ மருத்துவமனை செல்வது தெரிந்தது.
ஆனால் மருத்துவமனை செல்வதற்குள் குழந்தை வெளியே வந்து விடும் என்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார். மருத்துவமனை செல்வதற்குள் அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள்கொடியை அகற்றி, தாய் சேய் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நல்லிரவில் பிரசவ வலியால் துடித்த வட மாநில பெண்ணுக்கு பெண் காவலர் ஒருவர் பிரசவம் பார்த்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய சம்பவம் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதனிடையே பிரசவம் பார்த்த பெண் காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய பெண் காவலர் கோகிலா, நேற்று சுதந்திர தினம் என்பதால் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம் நள்ளிரவில் நாங்கள் சோதனை மேற்கொண்டு இருந்த பகுதிக்கு வந்த ஆட்டோவில் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது அங்கு சென்று பார்த்த போது வடமாநில பெண் என்பதும் அவர் பிரசவ வேதனையில் துடித்தும் தெரிய வந்தது. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் தான் மருத்துவமனைக்கு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகவும் தன்னை ஆட்டோவில் வருமாறும் கூறினார்.
இதையும் படிங்க: ஆட்டோ பார்க்கிங் காரால் நேர்ந்த கொடூரம்... உயிருக்கு போராடும் கார் உரிமையாளர் - நடந்தது என்ன?
இதனைத் தொடர்ந்து ஆட்டோவில் செல்லும்போது அந்தப் பெண்ணிற்கு பிரசவமானது. நான் ஏற்கனவே நர்சிங் முடித்து எட்டு மாதம் பயிற்சி பெற்றதால் என்னால் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்க முடிந்தது. மருத்துவமனை வருவதற்குள்ளேயே அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் தொப்புள்கொடி அகற்றி இருவரையும் சிகிச்சைக்கு சேர்த்தோம்.
நர்சிங் முடித்து இருந்தாலும் எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது அதனால் நர்சிங்கை விட்டுவிட்டு போலீசாக பணியாற்றி வருகிறேன் இருந்தபோதும், இந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க நான் படித்த படிப்பு உதவியாக இருந்தது எனக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது சொந்த ஊர் சேலம் என்றும் தற்பொழுது திருப்பூர் எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து போலீசாக பணியாற்றி வருவதாகவும். தனது தந்தை ராஜா தற்பொழுது உயிரோடு இல்லை. அம்மா ஜெயந்தி மற்றும் அக்கா தம்பியுடன் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “ஐ.பெரியசாமி வாழ்க” - அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிர்ப்பு... தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகரால் பரபரப்பு...!