செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் ஓலைக் கொட்டகையில் இயங்கி வந்த பஞ்சாபி தாபா உணவகம் ஒன்று இன்று இரவு திடீரெனத் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகியுள்ளது. நல்வாய்ப்பாக உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் ஆதித்யா என்பவருக்குச் சொந்தமான பஞ்சாபி தாபா உணவகம் (Punjabi Dhaba Hotel) ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த உணவகம் முழுவதும் பாரம்பரிய முறைப்படி ஓலைக் கொட்டகையால் அமைக்கப்பட்டிருந்தது. இன்று இரவு 9 மணி அளவில், வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் பலரும் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரெனக் கொட்டகையின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஓலைகளால் வேயப்பட்டிருந்ததாலும், இரவு நேரத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ மளமளவென உணவகம் முழுவதும் பரவி, கொளுந்துவிட்டு அசுர வேகத்தில் எரியத் தொடங்கியது.
உணவகத்தில் தீப்பற்றியதைக் கண்ட உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அலறியடித்தபடி அசுர வேகத்தில் வெளியே ஓடி வந்தனர். இந்தத் தீ விபத்தில் உணவகத்தின் உள்ளே போடப்பட்டிருந்த கயிறு கட்டில்கள், மர மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தீயில் கருகி முற்றிலும் சாம்பலாகின. இது குறித்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிறுச்சேரி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுச்சேரி சிப்காட் தீயணைப்புத் துறை வீரர்கள், அசுர வேகத்தில் பரவிய தீயை மேலும் பரவ விடாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சற்றேறக்குறைய அரை மணி நேரம் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு உணவகத்தில் எரியூட்டப்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் ஏற்பட்ட பொருட்களின் மொத்த மதிப்புச் சேதம் எவ்வளவு என்பது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் சிலிண்டர் கசிவா அல்லது மின் கசிவா என்பது குறித்தும் தாழம்பூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் பரபரப்பான மாம்பாக்கம் சாலையில் நேரிட்ட இந்தத் தீ விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு.. 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!