ஜூலை 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து மைசூரு நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் ஏகாட்டூர் அருகே வந்தபோது, அந்த ரயில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

மேலும் ஏகாட்டூரைச் சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கரும்புகையின் பாதிப்பு உணரப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் இப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி..! பற்றி எரியும் ரயில்.. சூழ்ந்த கரும்புகை.. நடந்தது என்ன..?
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவள்ளூர், திரூர், கும்மிடிப்பூண்டி சிப்காட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் தேசிய மீட்பு படையினர், ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டீசல் டேங்கர் ரயிலில் அதிகாலை 5.20 மணிக்கு பற்றிய தீ, சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமானது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்தால் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் மற்றும் மின்சார கம்பிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் மற்றும் உயர் மின்னழுத்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சரக்கு ரயிலில் தீ பிடித்த விபத்து குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சரக்கு ரயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்து நடந்த பகுதியை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி..! பற்றி எரியும் ரயில்.. சூழ்ந்த கரும்புகை.. நடந்தது என்ன..?