தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சமீபத்தில் வெளியிட்ட முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் தான். எம்ஜிஆர்-இன் 109வது பிறந்தநாள் நினைவு நாளில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார்.
இதில் மிக முக்கியமானது, குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களின் பெண் தலைவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 2,000 ரூபாய் நேரடியாக போடப்படும் 'குல விளக்கு' திட்டம். இதுதவிர, ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், அனைவருக்கும் வீடு (அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவது), 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது, ஐந்து லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம் போன்றவை அடங்கும். இந்த அறிவிப்புகள் வெளியான உடனேயே, திமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. திமுக அமைச்சர்கள் இதை 'காப்பி அடித்தல்' என்று குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, திமுகவின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் ஏற்கனவே மாதம் 1,000 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக அதை இரட்டிப்பாக்கி 2,000 ரூபாய் என்று சொல்வது வெறும் அதிகரிப்பு மட்டுமே என்று அவர்கள் கூறுகின்றனர். அதேபோல், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை திமுக ஏற்கனவே செயல்படுத்தியிருக்க, அதிமுக இப்போது ஆண்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவிப்பது, திமுக திட்டங்களின் மீது 'ஸ்டிக்கர் ஒட்டுவது' போன்றதுதான் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: EPS சார்... இது உங்களுக்கு செட் ஆகல..! வெயிட் பண்ணி XEROX எடுத்துக்கோங்க... அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த டிஆர்பி ராஜா..!
"திமுக தேர்தல் அறிக்கை வெளியான பிறகு காப்பி எடுக்கலாம் என்று காத்திருந்தால் போதும்" என்று அவர் கிண்டலடித்தார். அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த ஐடியா இல்லை என்று கூறி, "திமுக போட்ட பாதையில் தான் அதிமுக பயணிக்கிறது" என்று விமர்சித்தார். அமைச்சர் எஸ். ரகுபதி கூட, "திமுக திட்டங்கள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் தான் எடப்பாடி அதையே காப்பி அடித்து வாக்குறுதியாக்கியிருக்கிறார்" என்று கூறினார்.
இதனிடையே, அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து வெளியிடவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த உடனேயே திமுக ஆட்டம் கண்டு விட்டதாக செல்லூர் ராஜு கூறினார். மேலும் மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆண்களுக்கும் இலவச பயணமா? ஏற்கனவே மகளிரை அசிங்கப்படுத்தியது போதாதா? கொந்தளித்த சீமான்..!