7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நடத்த போதிய நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நடத்திட போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 48 மணிநேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 600க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: மனு கொடுக்கும் முகாமா? மக்களை முடக்கும் முயற்சியா? திமுக அரசை சாடிய அதிமுக
நாளையும் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஒ அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவுகள் உள்ளிட்டவை பணியாளர்களின்றி பணிகள் முடங்கின.
தாலுகா அலுவலகங்களில் தாசில்தார்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள், மண்டல தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக உதவியாளர்கள் முதல் தாசில்தார்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை மாலை வரை வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில் 5ம் தேதி அரசு விடுமுறை, 6, 7 சனி, ஞாயிறு என்பதால் செப்டம்பர் 8ம் தேதி திங்கள்கிழமை முதலே வருவாய்துறையில் அலுவலக பணிகள் இயல்புநிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மனு கொடுக்க வந்தவரை நெஞ்சில் குத்திய எஸ்.ஐ! உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பதற்றம்