பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாகவும், மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாக தண்டனைகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. சி.பி.ஐ யின் முயற்சி வீண் போகவில்லை. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைத்து உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதவீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமோ, அதற்கேற்ப பிரித்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்றார்.
இதையும் படிங்க: பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!
கடைசி வாதத்தில், சாட்சி விசாரணைகளின் அடிப்படையில் வாதங்கள் நடைபெற்றதாகவும், விசாரணையில் பெறப்பட்ட அனைத்து சாட்சி மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றம் அவற்றை சரி பார்த்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அபராத தொகையானது குற்றவாளிகளின் தண்டனையை பொறுத்து ஒதுக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிபதி தீர்ப்பின் போது எந்த மேற்கோள்களையும் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.

மேல்முறையீடு குறித்தான கேள்விக்கு, எதிர் தரப்பினர் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். அதனைப் பற்றி நாங்கள் தீர்மானிக்க முடியாது. 30 நாட்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. என்னை பொறுத்த வரை நீதிமன்றம் நல்ல முறையில் விசாரித்து பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தண்டனை நிலை நிறுத்தப்படும் என்று தான் நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
வழக்கின் நெடிய பயணம் குறித்து பேசிய அவர், இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையான சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்றார். ஒன்பது குற்றவாளிகளுக்கும் தலா ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வாய்மொழி சாட்சிகள், மின்னணு சாட்சிகள் மற்றும் நிபுணத்துவ சாட்சிகள் இந்த வழக்கில் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டார். இந்த வழக்கு 8 தனித் தனி புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அனைத்தும் ஒரே சம்பவத்துடன் தொடர்புடையவை என்பதால் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்டது.

தண்டனை விவரங்களை குறிப்பிட்ட அவர், சபரிராசனுக்கு நான்கு ஆயுள் தண்டனைகளும், திருநாவுக்கரசுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், சதீஷ்க்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், வசந்தகுமாருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளும், மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகளும், பாபுவிற்கு ஒரு ஆயுள் தண்டனையும், ஹேரேன் பாலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும், அருளானந்தத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
திருநாவுக்கரசுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டதற்கு காரணம், அவர் ஐந்து பெண்கள் பாதிக்கப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தது தான் என்றும் அவர் விளக்கினார். இந்த வழக்கில் மகேந்திரா சாவ்லா வழக்கின் தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சி.பி.ஐ விசாரணைக்கு வந்த பிறகு பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்றும், ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து கைதிகளும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் வழக்கறிஞர் சுரேந்திரமோகன் கூறினார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை அதிமுக காப்பாற்றியது..! கனிமொழி எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு..!