திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரத்துக்கு பொறுப்பான நபர் கைது செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியான சிப்காட் தொழிற்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் இந்த மூன்று வயது சிறுமி. ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தை காணாமல் போனதாக பெற்றோர் அறிந்தனர். உடனடியாக உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, அருகிலுள்ள முட்புதரில் காயங்களுடன், உடல்நிலை மோசமடைந்த நிலையில் குழந்தை கிடைத்தார்.

உடனடியாக அவரை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் குழந்தையை முட்புதரில் தூக்கி வீசிய பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அனுப்பி ஒப்படைக்கப்பட்ட நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: "நீதி கேட்டு மீண்டும் போராட்டம்": சிறுமியின் உடலைபுதைத்ததைக் கண்டித்து சாலை மறியல்!
இந்த நிலையில், தமிழக அரசு சார்பாக ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பீகார் இளைஞருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நடந்த சம்பவம் தொடர்பாக கைதானவர் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். போதையில் குழந்தையிடம் அத்துமீறியதாகவும், பாலியல் உணர்ச்சியில் தவறு செய்துவிட்டதாகவும் கைதானவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மூன்று வயது குழந்தையை சீரழித்த நபரின் வாக்குமூலம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!