தமிழ்நாட்டில் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மேல்முறையீடு செய்துள்ளது. 2025 ஜனவரியில், மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் (ஏப்ரல் 28, 2025க்குள்) அகற்ற உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உறுதி செய்தது. இந்த வழக்கில், தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி எஸ்.எஸ்.சவுந்தர், நீதிபதி ஆர்.விஜயகுமார் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அறிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்ட மாநில அரசின் முடிவுக்கு, மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தொடர்ந்த வழக்கில், மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்து, தற்போதைய நிலையைத் தொடரவும், வழக்கை வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
2019-ல் சென்னை உயர் நீதிமன்றம், சாலையோரங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நடுவதைத் தடை செய்து 124 பக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும், பல இடங்களில், குறிப்பாக சென்னையில், திமுக உள்ளிட்ட கட்சிகள் அனுமதியின்றி ஆயிரக்கணக்கான கொடிக்கம்பங்களை நிறுவியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், 2025 மார்ச் 19-ல், 15 நாட்களுக்குள் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டார்.

பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பாதுகாப்பு அபாயங்களை உருவாக்குவதாகவும் புகார்கள் எழுந்தன. மறுபுறம், அரசியல் கட்சிகள் இவற்றை தங்கள் பிரசாரத்தின் அங்கமாகக் கருதுகின்றன. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை, இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இறுதி முடிவு ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்படுகிறது, இது தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொது இடப் பயன்பாட்டு முறைகளை மறுவரையறை செய்யலாம்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?