தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ ரிக்ஷா கட்டணங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2013 ஆகஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டண முறையின்படி முதல் 1.8 கிலோமீட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.25 மற்றும் அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12 வசூலிக்கப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வு, காப்பீடு, பராமரிப்பு செலவுகள் மற்றும் உதிரிபாக விலை உயர்வு காரணமாக ஓட்டுநர்கள் நீண்டகாலமாக கட்டண உயர்வு கோரி வந்தனர். 2022இல் சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி (ஜி.ஓ. எம்.எஸ். எண் 366), புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன. முதல் 1.8 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு வசூலிக்கலாம்.
இதையும் படிங்க: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி..! பசும்பொன் செல்லும் ஸ்டாலின்..! ஏற்பாடுகள் தீவிரம்..!!
காத்திருப்புக் கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1. மலைப்பாதைகளில் அடிப்படை கட்டணம் ரூ.60 மற்றும் கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.30 என சிறப்பு விதிகள் உள்ளன. 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு பழைய அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநில போக்குவரத்து ஆணையம் மற்றும் வட்டார அதிகாரிகள் இதை செயல்படுத்த வேண்டும்.

புதிய கட்டணத்திற்கு ஏற்ப மீட்டர்களை மாற்ற ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2027 ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து ஆட்டோக்களிலும் புதிய மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். அதுவரை பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் அரசு நிர்ணயித்த புதிய கட்டண விவரங்கள் அடங்கிய பலகையை ஆட்டோவில் ஒட்ட வேண்டும். மீட்டர் மாற்றப்படும் வரை அந்தப் பலகையின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
பழைய மீட்டர்கள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதால், மீட்டரில் காட்டும் தொகைக்கும் புதிய கட்டணத்திற்கும் வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பயணிகள் ஆட்டோவில் ஒட்டப்பட்டுள்ள பலகையை உன்னிப்பாகப் பார்த்து, அரசு நிர்ணயித்த விகிதத்தின்படி கட்டணம் செலுத்துவது நல்லது. ஓட்டுநர்களும் பயணிகளும் தெளிவான புரிதலுடன் செயல்பட்டால் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
இந்த மாற்றம் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அதேவேளை, பயணிகளுக்கும் நியாயமான கட்டண முறையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி சர்ப்ரைஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..! அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!