தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கோயில்களின் புனிதத்தையும் ஆன்மீகச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.சமீப காலங்களில் பல பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி எடுப்பது மற்றும் சமூக ஊடகங்களுக்காக ரீல்ஸ் உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுவதோடு, மற்ற பக்தர்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது. தரிசனத்தின் போது கவனம் சிதறுவதும், ஆன்மீக அனுபவம் குறைவதும் இந்த நடைமுறையால் உண்டாகிறது. இதைத் தடுக்கும் வகையில் அறநிலையத்துறை இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி, கோயிலுக்குள் நுழையும் முன் பக்தர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும். கோயில் நுழைவாயில்களுக்கு அருகிலோ அல்லது பாதரட்சை வைக்கும் இடங்களுக்கு அருகிலோ செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு செல்போனுக்கும் ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ரசீது ஐடிஎம்எஸ் முறையின் மூலம் வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் வீடுகளிலோ வாகனங்களிலோ செல்போன்களை வைத்துவிட்டு வருவது சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயில்களில் VIP கலாசாரத்திற்கு செக்? அமைச்சர், எம்எல்ஏக்களுக்கும் கட்டுப்பாடு! போட்டோ, வீடியோ எடுக்க தடை!
தடையை மீறி செல்போன் கொண்டு செல்பவர்களிடமிருந்து அது தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும்.இந்த நடவடிக்கை ஏற்கனவே சில முக்கிய கோயில்களில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், பழனி முருகன் கோயில் போன்ற இடங்களில் முன்னதாகவே செல்போன் கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படும். இதனால் பக்தர்கள் அமைதியான சூழலில் தரிசனம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பழனி பாணியில் திண்டுக்கல்லிலும் நிலம் மோசடி! கோவில் சொத்துக்களுக்கு குறி? புயலை கிளப்பிய விவகாரம்!