தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் நடிகர்களில் ஒருவரான விஷால், தனது வரவிருக்கும் திரைப்படம் ‘மகுடம்’க்கான ப்ரோமோஷன் புகைப்படங்களில் கையில் பெரிய கட்டுடன் தோன்றியிருப்பது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படங்கள் வேகமாகப் பரவியதால் ரசிகர்கள் மத்தியில் கவலையும் பதட்டமும் அதிகரித்துள்ளது. “விஷாலுக்கு என்ன ஆயிற்று?”, “மீண்டும் உடல்நலப் பிரச்சினையா?” என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. சிலர் சோகமான பின்னணி இசையுடன் வீடியோக்களையும் உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ‘மதகஜராஜா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஷால் முகம் வீங்கிய நிலையில், கண்களில் கண்ணீர் வழிய, உட்கார முடியாத அளவுக்கு உடல்நலக்குறைவாகத் தோன்றியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது அவர் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்ற அச்சம் பரவியது. ஆனால் சில வாரங்களிலேயே முழுமையாக மீண்டு வந்தார். அதேபோன்ற கவலை இப்போதும் மீண்டும் எழுந்துள்ளது. இதுவரை விஷால் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. மகுடம் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சிறு காயமாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மகுடம்’ ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது விஷாலின் இயக்குநர் அறிமுகப் படமாகவும் அமைந்துள்ளது. துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விஷால் மூன்று வேறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுவதாகத் தெரிகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் கறிக்கடை மாமா நினைவிருக்கா..!! நடிகர் VC ஜெயமணி காலமானார்..!!

ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஷால் படம் குறித்து மட்டுமல்லாமல், அரசியல் விவகாரங்கள் மற்றும் நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசி வருகிறார். கட்டிட வேலைகள் முடிந்ததும் தனது திருமணம் நடைபெறும் என முன்பு குறிப்பிட்டிருந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் திறப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் அவரது திருமணம் சீக்கிரம் நடைபெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஒரு காலத்தில் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த விஷால், இப்போது கையில் கட்டுடன் தோன்றுவது அவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் உடல்நலத்துடன் திரும்பி வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: வரும் 23ல் ஜனநாயகன் ரிலீஸ்..! வெயிட்டிங்லயே வெறி ஏறுதே..! துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!!