டெல்லியில் நேற்று தொடங்கிய ‘பாரத் மின்சார உச்சி மாநாடு 2026’ நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய மின்சாரத் துறை செயலர் பங்கஜ் அகர்வால் பிரதமரின் செய்தியை வாசித்தார்.
பிரதமர் மோடி தனது செய்தியில், “உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த வளர்ச்சியைத் தொடர மின்சாரத் துறையை வலுப்படுத்துவது மிக அவசியம். உள்கட்டமைப்பை மேம்படுத்தி, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்கச் செய்ய நாங்கள் தீவிரமாக உழைத்து வருகிறோம்” என்று கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், தற்போது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்துக்கு மேல் புதைபடிவமற்ற பசுமை எரிசக்தியிலிருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வரும் 2030-ம் ஆண்டுக்குள் பசுமை மின் உற்பத்தியை 500 ஜிகாவாட் அளவுக்கு உயர்த்தும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எல்லாரும் என்னை திட்டணும்! அதான் அவங்க எண்ணம்!! போரை அரசியலாக்கும் காங்கிரஸ்! மோடி விளாசல்!

மேலும், அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு வழிவகுக்கும் ‘சாந்தி சட்டம் 2025’ கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், “பிரதமரின் இலவச வீட்டு சூரிய மின் சக்தி திட்டம்” மூலம் மக்கள் தங்களது சொந்த வீடுகளிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றார்.
‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே கிரிட்’ என்ற முன்முயற்சியின் மூலம் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
உலகின் முன்னணி முதலீட்டாளர்களை இந்தியாவின் மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பங்கேற்க அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க ஒன்றுபட்டு செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: நாட்டின் நலனில் மோடி சமரசம்?! பார்லி.,யில் அனல் பறக்கும் விவாதம்!! ராகுல்காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி!