திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்தவர் ஜின்னா. இவர் மணப்பாறையில் ஏ.கே., தங்கமாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் கிளைகள் திருச்சி, திண்டுக்கல், நத்தம், விராலிமலை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி, தோகைமலை என மொத்தம், 11 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், மணப்பாறை பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஏ.கே. நகைக்கடையில் நேற்று மாலை, 5 மணிக்கு, 2 கார்களில் ஆறுக்கும் மேற்பட்ட, திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து, அங்கு சோதனை நடத்த தொடங்கினர். சிறிது நேரத்தில் திருச்சி வருமான வரித்துறை அலுவலக புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் சுவேதாவும் வந்து, நகைக்கடையில் சோதனையில் ஈடுபட்டார். மேலும், புத்தாநத்தத்தில் உள்ள ஜின்னாவின் வீடு, அங்குள்ள நகைக்கடை, துவரங்குறிச்சியில் உள்ள நகைக்கடை ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடை உரிமையாளரின் காரிலும் சோதனை நடத்தினர். நேற்று மாலை 5 மணிக்கு துவங்கி இன்று அதிகாலை 5 மணியாகியும் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்து வருகிறது.
நேற்று முன்தினம் அட்ஷய திதியை முன்னிட்டு நகை விற்பனை களைகட்டியிருந்த நிலையில் நேற்று மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ரகசிய தகவலின் பேரில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை நடந்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பணப்பட்டுவாடாவா..!! களத்தில் இறங்கிய IT அதிகாரிகள்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை..!!
இதையும் படிங்க: தேர்தல் செலவுக்கு பணம் பதுக்கல்...?! - திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை... அதிர்த்து போன அதிகாரிகள்...!