சென்னை அன்பகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது ஆபாச பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். திமுக துணை பொதுச்செயலர் பதவியும் , அமைச்சர் பதவியும் பறிபோனது. பொன்முடிக்கு எதிராக 124 புகார்கள் அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சா் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தாா். பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முடித்து வைக்க பொன்முடி தரப்பில் மனு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதி பி.வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வக்கீல், இந்த வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சருக்கு எதிரான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களும் விசாரித்து முகாந்திரம் இல்லை என்பதால் போலீசாரால் முடித்து வைக்கப்பட்டது என்றார்.
இதையும் படிங்க: “வாம்மா மின்னல்...” - கல்லூரியில் தலையைக் காட்டிவிட்டு ஓட்டமெடுத்த நிகிதா - மீண்டும் லாங்க் லீவு!
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மேலும், பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? ஒருவரை கொன்றுவிட்டு நான் கொல்ல விரும்பவில்லை என மீண்டும் கூற முடியுமா? சைவம், வைணவம் பிரிவுகள் தொடர்பாக இஷ்டம்போல் கருத்துகள் தெரிவிப்பது சரியா? இதில் நீதிமன்றம் வெறும் பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? இது ஜனநாயக நாடு என கருத்துகளை தெரிவித்திருந்தார்.

மேலும் நீதிபதி கூறுகையில் பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட முடியுமா? மைக் முன் பேசும் போது மன்னர்களாக நினைத்து கொள்கிறார்கள். அரசியல்வாதிகள் பொது இடங்களில் பேசும் போது யோசித்து பேச வேண்டும்.
அரசியல்வாதிகளின் சர்ச்சை பேச்சுகளை கோர்ட் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது என கண்டனம் தெரிவித்தார். ஆரம்பகட்ட விசாரணை என்பது புகாரில் குறிப்பிட்ட சம்பவம் நடந்ததா, இல்லையா? என்பது குறித்து விசாரிப்பது தான்.
அதன்பிறகு வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கின் முடிவை கோர்ட் தீர்மானிக்கும்.
சர்ச்சை கருத்தை கூறிய பொன்முடி வழக்கை எப்படி முடித்து வைக்க முடியும்? பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

பொன்முடி பேச்சு குறித்து புகாரளித்தவருக்கு விளக்கம் கொடுத்த பிறகே வழக்கு முடித்து வைக்க முடியும். சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் எவ்வாறு முடித்துவைக்கப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துக் கூறியிருக்கிறது.வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இதெல்லாம் கொடுமை... பாதுகாப்பை பலப்படுத்துங்க! உயிரிழந்த மாணவர்களுக்கு விஜய் இரங்கல்.