இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிதாக தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பு (MAB) தொகையை நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் ரூ.10,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தியது. இந்த மாற்றம் புதிய கணக்கு தொடங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இந்த உயர்வு, இந்தியாவின் உள்நாட்டு வங்கிகளில் மிக உயர்ந்த MAB தேவையாக கருதப்படுகிறது. அரை-நகர்ப்புற கிளைகளில் குறைந்தபட்ச இருப்பு ரூ.5,000 இலிருந்து ரூ.25,000 ஆகவும், கிராமப்புற கிளைகளில் ரூ.2,500 இலிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வங்கியின் பிரீமியம் வாடிக்கையாளர் தளத்தை விரிவாக்குவதற்காகவும், உயர் மதிப்புள்ள வாடிக்கையாளர்களை குறிவைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ICICI கொண்டு வந்த புது ரூல் விவகாரம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்..!!
குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்கத் தவறினால், வாடிக்கையாளர்கள் 6% பற்றாக்குறை அல்லது ரூ.500, இவற்றில் எது குறைவோ அதற்கு ஈடான அபராதம் விதிக்கப்படும். மேலும், வங்கி பணப் பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணங்களையும் மாற்றியமைத்துள்ளது. மாதத்திற்கு மூன்று இலவச பண வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் பரிவர்த்தனைகளுக்கு பிறகு, ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கு ரூ.150 வசூலிக்கப்படும். மாதாந்திர இலவச வரம்பு ரூ.1 லட்சத்தை தாண்டினால், ரூ.1,000க்கு ரூ.3.5 அல்லது ரூ.150, இவற்றில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்.
இருப்பினும், இந்த முடிவு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. பலர் இதனை "மத்தியதர வர்க்கத்திற்கு பெரும் அடி" என விமர்சித்தனர். 90% இந்தியர்களின் மாத வருமானம் ரூ.25,000-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், ரூ.50,000 இருப்பு வைத்திருப்பது சவாலானது என விமர்சகர்கள் கூறினர். "இது வங்கியை பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதாக மாற்றுகிறது" என சமூக ஊடகங்களில் கருத்துகள் பரவின.
இந்நிலையில் இந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கி தனது முடிவை மாற்றியுள்ளது. புதிய கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.50,000-லிருந்து ரூ.15,000 ஆக குறைத்தது. அதேபோல, புறநகர் பகுதிகளில் 25,000 ரூபாயாக அறிவிக்கப்பட்ட மாதாந்திர இருப்புத் தொகை 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கிராம புறங்களில் 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்ட மாதாந்திர இருப்புத் தொகையை 2,500 ரூபாயாக ஐசிஐசிஐ குறைத்துள்ளது.

"வாடிக்கையாளர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டது" என வங்கி அறிவித்தது. மேலும், 60 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் 1,200 தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த குறைந்தபட்ச இருப்பு விதிமுறை தளர்த்தப்பட்டது.
இந்த மாற்றம், வங்கியின் உயர்நிலை வாடிக்கையாளர்களை குறிவைக்கும் முயற்சியாக இருந்தாலும், சமூக அழுத்தம் மற்றும் போட்டியாளர் வங்கிகளின் குறைந்த இருப்பு விதிமுறைகள் காரணமாக பின்வாங்க வேண்டியதாயிற்று.
இதையும் படிங்க: புதிய கணக்கு தொடங்குபவர்களின் கவனத்திற்கு.. ICICI கொண்டு வந்த புது ரூல்..!!