தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜயின் இன்றைய கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர். விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்.. கேட்கும் மரண ஓலம்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இச்சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக கரூர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். "இது துயரமான சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்" என்று அறிவித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல்படுத்தினர்.
போலீஸ் விசாரணையின்படி, காவல்துறை நிபந்தனைகளை தவெக மீறியதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. விஜயின் தாமதமும், ஏற்பாடுகளின் குறைபாடும் சுட்டிக்காட்டப்படுகிறது. இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நிலை விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தவெக தலைவர் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை திரும்பினார். இந்நிலையில் விஜய் இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து, தனது எக்ஸ் தளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூரில் பெரும் துயரம்.. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புகள்.. கதறும் உறவினர்கள்..!!