ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கேரள மாநிலம் கோழிக்கோடு போலீஸார் கைது செய்ய வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி பிரேம்குமார் நாடகமாடியதாகத் தெரியவந்துள்ளது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்ற கோழிக்கோடு போலீஸார், நள்ளிரவு 1 மணியளவில் சென்னையிலிருந்து கோழிக்கோடுக்கு அழைத்துச் சென்றனர்.
முதலீட்டாளர்களின் பணத்தைத் தனிநபர் வங்கிக் கணக்குகளுக்கும், பிற தொழில் நிறுவனங்களுக்கும் மாற்றியதாகப் பிரேம்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பாரத் லனா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பிரேம்குமாரை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீஸார் நேற்று அதிகாலை சென்னையில் கைது செய்ய வந்தனர்.
அப்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்ததைத் தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பசும்பொன்னில் குவியும் தலைவர்கள்.! துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர் மரியாதை.!!
இதையடுத்து, அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுவதுபோல் சாய்ந்தார். இதனால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரவு 12 மணியளவில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கோழிக்கோடு போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரிடம் பயணம் மேற்கொள்வதற்கான உடல்தகுதிச் சான்றிதழைப் பெற்ற போலீஸார், இரவு 12 மணியளவில் மருத்துவமனையிலிருந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர், அதிகாலை 1 மணியளவில் சைதாப்பேட்டை நீதித்துறை நடுவர் இல்லத்தில் பிரேம்குமாரை ஆஜர்படுத்தி, டிரான்சிட் வாரண்ட் பெற்றனர். இதையடுத்து, அதிகாலை 1.10 மணியளவில் காரில் அவரைக் கோழிக்கோடுக்கு அழைத்துச் சென்றனர்.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக பிரேம்குமார் மூன்று முறை நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி நாடகமாடியதாகவும், இருப்பினும் உரிய மருத்துவப் பரிசோதனை மற்றும் உடல்தகுதிச் சான்றிதழைப் பெற்ற பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோழிக்கோடு போலீஸார் அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோவில் ஜிபிஎஸ் மீட்டர் பொருத்தும் திட்டம் அம்போ!! அரசு கைவிட்டதா? பயணிகள் கடும் அதிருப்தி!