கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெருநகர பழ மண்டி வளாகத்தில், கோடை காலத்தின் வரவான பலாப்பழ சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவியும் பலாப்பழங்களை சிறு வியாபாரிகள் ஆர்வத்துடன் ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே பழச்சந்தைகளில் மா, பலா, வாழை என முக்கனிகளின் வரத்து அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், கோவையின் பிரதான சந்தையான உக்கடம் பழ மண்டிக்கு தற்போது பலாப்பழங்களின் வரத்து பெருமளவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளா தமிழகத்தின் பலாப்பழ மையங்களான பண்ருட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் இரவு நேரங்களில் லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் டன் கணக்கில் பலாப்பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. இரவில் வந்து சேரும் பழங்கள், விடியற்காலை 4 மணி முதலே ஏலத்திற்கு விடப்படுகின்றன. இது குறித்து உக்கடம் பகுதி பலாப்பழ வியாபாரிகள் கூறுகையில், தற்போது பலாப்பழ சீசன் முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

கேரளா மற்றும் பண்ருட்டி பகுதிகளில் இருந்து தரமான பழங்கள் சந்தைக்கு வருகின்றன. அதிகாலை நேரத்திலேயே சில்லறை வியாபாரிகளும், ரோட்டோர வியாபாரிகளும் திரண்டு வந்து தங்களுக்குத் தேவையான பழங்களை ஏலம் முறையில் போட்டிப்போட்டு எடுத்துச் செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பழங்களின் தரம் நன்றாக இருப்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம், சித்திரை கனியின் போது கிலோ ரூ.60 க்கு விற்பனையானது. இப்போது ரூ.40 முதல் ரூ.38 வரை விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது என்றனர்.
உக்கடம் மண்டியில் ஏலம் எடுக்கப்படும் இந்த பலாப்பழங்கள், பின்னர் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும், ரோட்டோரக் கடைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. கோடை வெயிலின் தாக்கத்திற்கு இடையே இனிப்புச் சுவை கொண்ட பலாப்பழங்களை வாங்க பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் வாரங்களில் வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால், விலையும் பொதுமக்களுக்கு ஏதுவான முறையில் இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!