சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூளைமேட்டில் உள்ள வீரபாண்டி நகர் ஒன்றாவது தெருவில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை காரணமாக தண்ணீர் தடையின்றி வெளியேற வடிகால் அருகே பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் அருகே தடுப்பு ஏதும் அமைக்கப்படாமல் வடிகால் பள்ளத்தின் மேல் மரப்பலகையை வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அந்தப் பள்ளத்தில் பெண் ஒருவர் தலைகீழாக கழுத்து எலும்பு உடைந்த நிலையில் கிடப்பதை நேற்று காலை 8 மணி அளவில் அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தவுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்தது 42 வயதான தீபா என்ற பெண் என்பதை கண்டுபிடித்தனர்.

அது மழை நீர் வடிகால் தொட்டி அல்ல என்றும் வண்டல் மண் தொட்டி எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளத்தில் தவறி விழுந்து நெற்றி பொட்டில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அந்த பெண் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை
12:30 மணியளவில் விழுந்துள்ளதும் ஒரு மணி அளவில் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பிரேத பரிசோதனை விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தீபாவின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வருமான வரி பாக்கி: ஜெ.-வின் வாரிசுக்கு பறந்த நோட்டீஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!