தமிழகத்தில் கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் முக்கியமான நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட், கருங்கல், மணல் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்ல இனி அனுமதி இல்லை என கனிம வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் கடுமையாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் கனிம வளங்கள் அனுமதியின்றி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் பெருமளவில் கொண்டு செல்லப்பட்டன. மாநிலத்திற்குள்ளும் அனுமதியற்ற குவாரிகளிலிருந்து கனிமங்கள் சுரண்டப்பட்டு கடத்தப்பட்டன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டது.

சாலைகளில் அதிக எடையுடன் செல்லும் லாரிகள் போக்குவரத்து நெரிசலையும் விபத்துகளையும் ஏற்படுத்தின.இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து லாரிகளிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இன்று முதல் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு மிமாஸ் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு மட்டுமே கனிமங்களை ஏற்றிச் செல்ல நடைச்சீட்டு வழங்கப்படும். ஜி.பி.எஸ். இல்லாத லாரிகளின் அனுமதிச்சீட்டுகள் ரத்து செய்யப்படும். அனுமதியின்றி கனிமங்களை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: நாளை முதல் அமலாகிறது `வெற்றி பயணத்திட்டம்’ - இதெல்லாம் நோட் பண்ணிக்கோங்க...!
தமிழகத்தில் கனிம வளம் ஏற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் லாரிகள் பதிவு செய்துள்ளன. ஆனால் இதுவரை இருபத்து நான்காயிரம் லாரிகளில் மட்டுமே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள லாரி உரிமையாளர்கள் உடனடியாக கருவியைப் பொருத்தி பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களால் கனிமங்களை ஏற்றிச் செல்ல முடியாது. ஜி.பி.எஸ். மூலம் லாரியின் இருப்பிடம், செல்லும் வழித்தடம், ஏற்றியுள்ள கனிம அளவு ஆகியவை நேரடியாகக் கண்காணிக்கப்படும். இதனால் சட்டவிரோத கடத்தலை எளிதாகக் கண்டறிய முடியும்.
இதையும் படிங்க: “மக்களே நாளை திருவிழாவாக கொண்டாட தயாராகுங்கள்...” - விடிந்ததுமே சி.எம்.விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!