மணல் கொள்ளையைத் தடுத்த இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள குராயூர் பகுதியில் மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த இளைஞர் மீது மர்ம கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமண்டல நதி குராயூர் வழியாகப் பாய்கிறது. இந்த நதிப்படுகையில் குராயூர் பகுதியைச் சேர்ந்த கலாநிதி மற்றும் அஜித் என்பவர்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காவல்துறைக்கு புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சென்னம்பட்டி பகுதியில் மணல் அள்ளிவிட்டு ஒரு லாரி குராயூர் வழியாகச் சென்றுள்ளது. இதைக் கண்ட குராயூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் லாரியை வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து, பிரகாசைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்ட முயன்றனர். உயிருக்கு பயந்து பிரகாஷுடன் இருந்த நண்பர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதில் பிரகாஷின் தலை மற்றும் கையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு, அக்கும்பல் லாரியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதையும் படிங்க: மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!
காயமடைந்த பிரகாஷ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெட்டு காயங்களுடன் உடம்பில் ரத்தம் சொட்ட பிரகாஷ் வெளியிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது. சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து பலமுறை ஆதாரங்களுடன் புகார் அளித்தும், திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி காவல் நிலைய போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கே இத்தகைய துணிச்சலான தாக்குதலுக்குக் காரணம் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: மீனாட்சி திருக்கல்யாணத்தில் திடீர் பரபரப்பு... கொந்தளித்த பக்தர்கள்... போலீசாருடன் வாக்குவாதம்...!