மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் உள்ளூர் வேட்பாளருக்கு பதிலாக சென்னையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமனை திமுக வேட்பாளராக அறிவித்திருப்பது, அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுராந்தகம் தொகுதிக்கான திமுக வேட்பாளராக பரந்தாமனை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் தாக்கமும் இருப்பதாக கூறப்படும் சூழலில், திமுகவின் வெளியூர் வேட்பாளர் அறிவிப்பு கட்சிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியில் கட்சிப் பணியாற்றி வரும் ஒன்றிய செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர், தாங்களும் வேட்பாளர் வாய்ப்பை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுவதில் தயக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் திமுகவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் தலித், வன்னியர், முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், உள்ளூர் அரசியல் மற்றும் சமூக சூழலை நன்கு அறிந்த நிர்வாகிகளால் மட்டுமே அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், திமுகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன்படுத்தி தனது வாக்கு வங்கியை அதிகரிக்க தவெக தரப்பு முயற்சி மேற்கொள்ளலாம் என்றும் உள்ளூர் நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சில திமுக நிர்வாகிகள் தவெகவுக்கு செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்தில் சமூக பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் ஏற்கனவே தொகுதியில் கட்சியின் அமைப்பு பலவீனமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இத்தகவல்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் சுகன்யா போட்டியிடும் நிலையில், அத்தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக திமுக துணைப் பொதுச்செயலாளர் சாமிநாதன் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!