சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் இளைஞர் அஜித்குமார். இவரை திருட்டு வழக்கில் விசாரணை மேற்கொள்ள போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து இதில் சம்பத்தப்பட்ட காவலர்கள் ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன், கண்ணன் ஆகிய 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் கடுமையான கண்டனத்தை தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரத்தான மெட்ரோ ரயில்... பயணிகள் அவதி; காரணம் இதுதானாம்!!

அதேபோல் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் சிவகங்கை மாவட்ட பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை காவலர்கள் சீருடை கூட அணியாமல் அஜித்குமாரை மடப்புரம் காளியம்மான் கோயில் பின்புறம் பைப்பை வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுமட்டுமல்லாமல் அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒருவர், தண்ணீர் கூட கொடுக்காமல் வாயில் மிளகாய் பொடியை கொடுத்து அடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கொடூர சம்பவம்! அஜித் மரணம் சாதாரண கொலையே இல்லை.. நீதிபதிகள் அதிர்ச்சி..!