நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதிகளில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கரக் காட்டுத்தீயால் சுமார் 100 ஏக்கர் அளவிலான வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. கோடை கால வறட்சியால் காய்ந்து கிடந்த புற்கள் மற்றும் செடி கொடிகள் தீப்பற்றி எரிந்து வருவதால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைய மண்டலமாகக் காணப்படுகிறது.
இன்று மதியம் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ மூன்று முக்கிய இடங்களில் தீவிரமாகப் பரவியுள்ளது சிங்காரா வனப்பகுதிக்கு உட்பட்ட ஆச்சக்கரை வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்து வருகிறது. மசினகுடியில் இருந்து சிங்காரா நீர்மின் நிலையம் செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள வனப்பகுதிகள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்கள் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் இந்த நிலங்கள் வனப்பகுதியைப் போலவே அடர்ந்த மரங்களைக் கொண்டுள்ளதால், தீயைக் கட்டுப்படுத்துவது சவாலாக மாறியுள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் நிலவும் கடும் வறட்சி மற்றும் பலத்த காற்றால் தீ மளமளவெனப் பரவி வருகிறது. சில இடங்களில் 100 அடி உயரத்திற்கு மேல் தீப்பற்றி எரிந்ததால், வனத்துறையினர் அதனை நெருங்க முடியாமல் திணறினர். மசினகுடி வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீ பரவி வருவதால், யானைகள், கரடிகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் பாதுகாப்பான இடங்களைத் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. குறிப்பாகத் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு அருகே தீ பரவியதால், அங்கிருந்த கும்கி யானைகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
காட்டுத்தீ அபாயத்தைக் கருத்தில் கொண்டு, முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் செல்லவும், வாகனச் சபாரி மேற்கொள்ளவும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தீயைக் கண்காணிப்பதற்காக 'பரண்' எனப்படும் உயரமான கண்காணிப்புக் கோபுரங்கள் மூலம் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மனிதத் தவறுகளால் இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!