மதிமுகவைச் சேர்ந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு, ஒரு கோடி ரூபாய் காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக அவர் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய விவகாரத்தில், இந்தச் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் பணத்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறினால் கூடுதல் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 2026 தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் சதன் திருமலைக்குமார், கடந்த 2016-ஆம் ஆண்டு தனது சொந்தத் தேவைகளுக்காக ‘நியூ லிங்க் ஓவர்சீஸ்’ (New Link Overseas) என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் விதமாகத் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு காசோலைகளை அவர் அந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். அந்த காசோலைகளை நிதி நிறுவனத்தின் இயக்குநர் வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் போதிய பணம் இல்லாததால் அவை ‘பவுன்ஸ்’ ஆகித் திரும்பின.
இதையும் படிங்க: #BREAKING: “அந்த சிவப்பு கோடு இல்லையா? தொடவே வேண்டாம்!” - போலி மருந்துகளை துரத்தும் சுகாதாரத்துறை!
இது குறித்து சதன் திருமலைக்குமாரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காததால், நிதி நிறுவன இயக்குநர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி சுந்தரபாண்டியன் இறுதித் தீர்ப்பினை வழங்கினார். அதில், எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார். மேலும், புகார்தாரருக்கு வழங்க வேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை இரண்டு மாத காலத்திற்குள் அவர் திருப்பித் தர வேண்டும் என்றும், அப்படித் தவறும்பட்சத்தில் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சட்ட விதிகளின்படி, மக்கள் பிரதிநிதிகள் மீது இத்தகைய தண்டனைகள் விதிக்கப்படும்போது அவர்களின் பதவிக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால், மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாகத் தண்டனையை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வெளியே வந்த சதன் திருமலைக்குமார் தரப்பினர், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளது மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை... கண்டுகொள்ளாத திமுக... வடமாநில இளைஞர் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்...!