தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டு தொடங்கும் வேளையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்டப் பொருட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் பணியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரடியாக ஆய்வு செய்தார்.
இந்த நடவடிக்கை, பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 1-ம் தேதியன்று மாணவர்கள் அனைவருக்கும் உரிய பொருட்கள் உடனடியாகக் கிடைக்கச் செய்யும் அரசின் உறுதியான முயற்சியின் ஒரு பகுதி. அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணியின்போது, 4.11 கோடிக்கும் மேற்பட்ட பாடநூல்கள் தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான ஒன்பது புதிய பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்தப் புத்தகங்கள் குழந்தை மையக் கல்வியை வலியுறுத்தும் வகையில், கதைகள், பாடல்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் கற்றலை ஊக்குவிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. 4 முதல் 12-ம் வகுப்பு வரை தற்போதைய பாடத்திட்டம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!
இதற்காக மாவட்டங்களுக்கு ஏற்கெனவே பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விநியோகப் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்களும் இணைந்து செயல்படுத்தப்பட்டன. 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்த பயிற்சி ஜூன் 1 முதல் 3 வரை நடைபெறும். மாணவர்களின் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பள்ளி சூழலை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!