ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் உள்ள வேலாயுத சாமி கோவிலில் தற்போது ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவில் முன்பு 186 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திருக்கோவில் திருப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்து சமய அறநிலையத்துறை சட்ட உருவாக்கப்பட்ட நாளிலிருந்து நடைபெறாத எண்ணிக்கையில் திருப்பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். மன்னர் ஆட்சி காலத்தை விட திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் 3500 கோவில்களில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆக்கப்பூர்வமான பணிக்கு துறையின் சார்பில் கேட்கப்படும் நிதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகவும் பழனி இரண்டாம் கட்ட திருப்பணிக்கு 58 கோடி அரசே வழங்கி 54 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார். மேலும் திருச்செந்தூர் கோவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பெருத்திட்டத்தின் கீழ் 75 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள பணிகள் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அறுபடை வீடுகளில் ஒன்றான சாமி மலைக்கு 100 படிகள் இருப்பதால் படியேறும் பக்தர்கள் சிரமம் கருதி மின் தூக்கி அமைக்கவும், மருதமலை கோவிலிலும் படிக்கட்டுகள் இருப்பதால் மின் தூக்கி அமைக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆட்சியில் அனைத்து சைவம், வைணவம் கடவுளுக்கும் சிறப்பு சேர்ப்பதுடன் முருகனுக்கு மாநாடு நடத்தி பெருமை சேர்த்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் உலக அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலம் கடந்து நிற்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிலை அமைக்கப்படும் எனவும் கூறினார். இந்த ஆட்சியில் உபயதாரர்கள் நிதி எண்ணத்திற்கு ஏற்ப திருப்பணிகள் செலவு செய்யப்படுகிறது என்றும் மனம், எண்ணம் நிறைவடைந்ததால் உபயதாரர்கள் நிதி வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. சூடு பிடிக்கும் இபிஎஸ் பரப்புரை..! இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் தகவல்கள்..!
இதையும் படிங்க: ஊர் சேர்ந்தா தான் தேர் இழுக்க முடியும்! ஒற்றுமையோடு செயல்பட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை!