பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை, வெளியூர் பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை பெற முடியாதவர்களுக்கு நாளை (ஜனவரி 20) முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழர்களின் வீரத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை சுமார் 97 சதவீத பயனாளர்களுக்கு, அதாவது 2.15 கோடி குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், பண்டிகையை முன்னிட்டுச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மற்றும் பணி நிமித்தமாக வெளியில் இருந்த ஒரு சில குடும்ப அட்டைதாரர்களால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பரிசைப் பெற முடியாமல் போனது. அத்தகைய விடுபட்ட பயனாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் மீண்டும் பொங்கல் தொகுப்பை வழங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓய்வூதியத் திட்டம் ஒரு பூசி மெழுகும் வேலை! திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி!!
இந்தத் தொகுப்பில் முத்தாய்ப்பாக ₹3,000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது தவிரத் தகுதியுள்ள அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. "எந்தவொரு தகுதியுள்ள பயனாளிக்கும் பொங்கல் பரிசு மறுக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, விடுபட்டவர்கள் நாளை முதல் தங்கள் பகுதி ரேஷன் கடைகளை அணுகி உரிய ஆவணங்களைக் காண்பித்துத் தங்களின் பொங்கல் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் விடுபட்ட அனைவருக்கும் விநியோகித்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் முக்கிய துறைகளின் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு!