சென்னை ஈசியாரில் உள்ள பிரபல பொழுது போக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் ஒன்று பாதியில் நின்றதால் 30 பேரின் உயிர் அந்தரத்தில் ஊசலாடியது. செங்குத்தாக மேலே சென்று கீழே இறங்கக்கூடிய ராட்சத ராட்டினம் அந்தரத்தில் நின்றதால் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் மரண பீதியடைந்தனர்.
சம்மர் வெக்கேஷன் என்றாலே இப்போதெல்லாம் பிள்ளைகளை பெற்றோர்கள் வெளிநாடு, வெளியூர், வெளி மாநிலத்திற்கு சுற்றுலா செல்வது, குழந்தைகளை தீம் பார்க் போன்ற பொழுது போக்கு தலங்களுக்கு அழைத்துச் செல்வதும் வழக்கம். அந்த அடிப்படையில் ஈசிஆர் பகுதியில் இருக்கும் பிரபல விஜிபி தீம் பார்க்கில் உள்ள ராட்சச ராட்டினத்தில் செவ்வாய் கிழமை மாலை 6 மணி அளவில் பொதுமக்கள் அனைவரும் ஏறி, அதில் விளையாடியுள்ளனர். அதை இயக்க ஆரம்பித்த போது முதற்கட்டமாக சரியாக செயல்பட்டிருக்கிறது. ஆனால் திடீரென ஒரு 7 மணி அளவில் இந்த இயந்திரம் திடீரென கோளாறாகி, நடுவழியிலேயே நின்றுவிட்டது.

இதனால் அந்த ராட்டினத்தில் இருந்த மக்கள் 70 அடி உயரத்தில் சிக்கித் தவித்தனர். முதலில் ஏதாவது சின்ன பழுதாக இருக்கும் விரைவில் நீக்கிவிடலாம் என தீம் பார்க் ஊழியர்கள் நினைத்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து நேரம் அதிகரித்துக் கொண்டே சென்றது அந்தரத்தில் ஊசலாடிக்கொண்டிருந்த மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. டைம் தான் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்ததோ தவிர ராட்டினத்தில் ரிப்பேர் சரி செய்யப்படவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த மக்கள் உதவி கேட்டு அந்தரத்தில் இருந்து கூச்சலிட ஆரம்பித்தனர். இன்னும் சிலரோ தாங்கள் இப்படி ராட்சத ராட்டினத்தில் ஏறி நடுவழியில் சிக்கிக் கொண்டோம், எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என சோசியல் மீடியாக்களில் வீடியோ பதிவிட ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க: கார்கில் போருல நடக்காதது, ஆபரேஷன் சிந்தூர்ல நடந்தது! சசி தரூர் வெளியிட்ட ரகசியம்!

பிரச்சனையின் தீவிரம் அதிகமாவதை உணர்ந்த தீம் பார்க்க நிர்வாகம் வேக, வேகமாக பழுதை நீக்க நினைத்தாலும், ஏற்கனவே 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளின் கதறல் வீடியோக்கள் வைரலானதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் சேர்ந்து தீவிர மீட்பு பணிகளில் களமிறங்கினர். தீம் பார்க்கில் இருந்த உபகரணம் மூலம் சுற்றுலா பயணிகளை நெருங்க முடியாததால், கிண்டியில் இருந்து 150 அடி வரை நீட்டிக்கக்கூடிய ஸ்கை-லிஃப்ட் வாகனத்துடன் மீட்புக் குழு அனுப்பப்பட்டது.

இந்த மீட்பு பணியானது சுமார் 8.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்தது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், சிக்கியவர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட்களை விநியோகித்து, பின்னர் ஒவ்வொரு பயணியையும் பாதுகாப்பாக இறக்கினர். மருத்துவக் குழுக்கள் தரையில் முதலுதவி அளித்தனர், மேலும் யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தீம் பார்க் நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையிலேயே ராட்டினத்தை சரியாக பராமரிக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. இயந்திர கோளாறு தொடர்பாக ஏற்கனவே ஊழியர்கள் எச்சரித்தும் இயக்குநர்கள் அதனை புறக்கணித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விஜிபி தீம் பார்க்கை தற்காலிகமாக மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 30 பேரின் உயிரை பணயம் வைத்த தீம் பார்க் நிர்வாகத்தின் அலட்சியம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இதை செய்யலைனா தக் லைஃப்-க்கு தடை விதிப்போம்... கமலுக்கு கெடு விதித்த கர்நாடகா அமைச்சர்!!