தமிழகத்தில் தெரு நாய்களின் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சம்பவங்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை இலக்காகக் கொண்டு நிகழ்ந்து வருவது கவலையளிக்கிறது. மதுரையில் இந்த மாதத்தில் எட்டு வயது சிறுவன் செந்தில் மற்றும் அவரது தந்தை முத்துசாமி ஆகியோரை தெரு நாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்து தாக்கியது.

சிறுவனின் கைகள், கால்கள் மற்றும் தொடைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இந்த தாக்குதல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. மதுரை மாநகராட்சியின் விலங்கு கட்டுப்பாட்டு குழு, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நாயைப் பிடித்தது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களையும் வளைத்துப்போட்ட திமுக... நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் நடந்த தரமான சம்பவம்...!
இதேபோல் மயிலாடுதுறையில், வெறிநாய் ஒன்று 20க்கும் மேற்பட்டோரை தாக்கியது. பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை பகுதி உள்ளிட்ட பல இடங்களில் இந்நாய் தாக்குதல் நடத்தியதால், பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், 2023 நவம்பரில், சென்னை ராயபுரத்தில் ஒரு வெறிநாய் 29 பேரை, அதில் ஐந்து குழந்தைகளையும் கடித்தது. பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தமிழகத்தில் ஆண்டுக்கு 3.6 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின்றன, இது இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக உள்ளது. தற்போது மனிதர்களை தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்களை தொடர்ந்து மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை குறிவைத்து தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். லியாகத் அலி வழக்கம்போல் இன்று காலை ஆட்டுப்பண்ணைக்குச் சென்ற போது ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிகாலையில் ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் நடந்துள்ள இந்த நாய் கடி சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக லியாகத் அலி தெரிவித்துள்ளார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என லியாகத் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் கடந்த 26ம் தேதி திருவண்ணாமலை அருகே வந்தவாசி பகுதியில் 21 ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறி கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “இதுதாங்க நம்ப தமிழ்நாடு” - விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இந்துக்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்...!