அதிமுகவில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ-க்கள் கட்சியைச் சீரமைக்கப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி-யுமான திரு. தம்பிதுரை அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரின் கோரிக்கையை அடியோடு நிராகரித்து அவர் கூறியதாவது அதிமுகவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொதுக்குழு முறைப்படி நடைபெறும். அதற்கான தேதியைப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தகுந்த நேரத்தில் அறிவிப்பார். இப்போது அவசரமாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 25 நபர்களும் தங்களின் சுயலாபத்திற்காகவும், சொந்தத் தேவைகளுக்காகவுமே ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் சென்றுள்ளனர். வேறு ஒரு கட்சிக்கு (தவெக) சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து இன்னும் எடப்பாடியார் தான் எங்கள் பொதுச்செயலாளர் என்று அவர்கள் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அண்ணாவின் வழியில் எச்சரிக்கிறேன்! துரோகம் இழைப்பவர்களுக்கு எதிராக கே.பி. முனுசாமி அறிக்கை!

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ-க்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் பாயும் என அவர் எச்சரித்துள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் துரோகம் இழைத்த எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் மூன்று மாதத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி அவர்களின் எம்.எல்.ஏ பதவிகள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்வோம்.
பதவிகள் ரத்து செய்யப்பட்ட பிறகு வரும் இடைத்தேர்தலில், எடப்பாடியார் கை காட்டும் புதிய வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து காட்டுவோம் என சவால் விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அணிவகுத்து நிற்பதை தம்பிதுரை எம்.பி-யின் இந்தச் செய்தியாளர் சந்திப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுடன் கைகோர்க்க சொன்னவர் சி.வி. சண்முகம் தான்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு தகவல்!