தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற முழக்கத்துடன் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் நடைபெற்ற முகவர்கள் கூட்டத்தில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ. மற்றும் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
வாக்குச்சாவடியில் பணிபுரியும் தி.மு.க. முகவர்களின் பணிகள் குறித்தும், கடந்த இரண்டு தேர்தல்களில் அவர்கள் பெற்றுத் தந்த வாக்குகள் குறித்த புள்ளி விவரங்களுடனும் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெறும் வழிமுறைகள் குறித்தும் அவர் ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம், தி.மு.க.வின் சாதனைகளைப் பற்றிப் பேசும்போது, எதிர்க்கட்சிகளைச் சாடினார்:
பள்ளி, உயர்நிலைக் கல்வி, கல்லூரி கல்வி ஆகியவற்றை இலவசமாக மாற்றியது கலைஞர் ஆட்சிக் காலத்தின் மிகப் பெரிய சாதனை என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சாதனையைச் செய்ததால்தான் படித்த இளைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்.
இதையும் படிங்க: சட்டமன்ற தேர்தல் 2026: விஜய் முதல்வர் வேட்பாளராக இருந்தால் மட்டுமே கூட்டணி – நிர்மல் குமார் திட்டவட்டம்!
"தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்றால், அந்தத் தகுதியை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம்தான்," என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
"நேற்று வந்து, இன்றைக்கு முளைத்த காளான்கள் எல்லாம் தி.மு.க.வை அழிக்கின்றோம் என்று சொல்வதற்குத் தகுதி இல்லாதவர்கள்," என்று பா.ஜ.க.வை மறைமுகமாகக் குறிப்பிட்டு கடும் தாக்குதலைத் தொடுத்தார். நாட்டு மக்களின் வளர்ச்சியில் தி.மு.க.வின் பங்கு எப்போதும் உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழக முதலமைச்சரை 'நல்லவர்' என்று குறிப்பிட்டது அனைவருக்கும் தெரியும் என்று கூறிய அமைச்சர், மக்கள் மனதில் நிலைக்கும் வகையில், மகளிர் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை என அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்துப் பேசும்போது, "அ.தி.மு.க. கூடாரம் கலைந்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தேன் தடவி அ.தி.மு.க. வெல்லும் என எடப்பாடி பழனிசாமி ஆசை வார்த்தை கூறி உள்ளார்," என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: டெல்டாவுக்கு குறிவைக்கும் விஜய்..!! தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்.?? பக்கா பிளான்.!!