தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் முன்னிலையிலும், சமீபத்தில் இணைந்த குழுவின் தலைவர் அண்ணன் செங்கோட்டையன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு, பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தவெகவின் நிர்மல் குமார், "தேர்தல் பணிக் குழுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், என்னென்ன விதத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும், என்னென்ன சவால்களைக் கடக்க வேண்டும், எந்த அளவிற்கு நமக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது, அதை முடக்க நடக்கும் முயற்சிகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது," என்று தெரிவித்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும், அடுத்த மூன்று மாதங்களுக்குத் தவெக செய்ய வேண்டிய அனைத்துப் பணிகள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நிர்மல் குமார், "கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவை எங்களுடைய தலைவர் முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார். அதற்கான நாட்கள் இன்னும் இருக்கின்றன. தலைவர் முடிவெடுத்து அறிவிப்பார்," என்று நிறைவுப் பதிலைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்டாவுக்கு குறிவைக்கும் விஜய்..!! தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்.?? பக்கா பிளான்.!!
அப்போது, கூட்டணி குறித்து நிறைய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், "எங்கள் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்," என்று திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் குழுக்கள் அமைக்கப்படும் என்றும், அது தலைவரின் வாயிலாகவே அறிவிக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பொதுக் கூட்டங்கள் நடத்தவும், ரோட் ஷோ நடத்தவும் பல மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நிர்மல் குமார் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
"பிரச்சினைகள் உங்க எல்லாருக்கும் தெரியும். எல்லா கட்சியிலும் மக்கள் சந்திப்பு நடக்குது. இதில் எங்களுக்கு மட்டும் தான் இந்தச் சிக்கல் இருக்கிறதா? காவல்துறை ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எங்களுக்கு நிறையச் சிக்கல் உள்ளது. இது எதனால் தி.மு.க. செய்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களுடைய ஒரே குறிக்கோள், எங்களை எந்த விதத்திலும் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பதுதான்," என்று அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.
"இதையெல்லாம் மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வாறு எங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று. அதையும் தாண்டி எங்களுடைய பிரச்சாரங்கள், மக்கள் சந்திப்புகள் கண்டிப்பாக நடைபெறும். எல்லாவற்றையும் கடந்து நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்," என்று அவர் உறுதிபடக் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும்! தி.மு.க கூட்டணி கட்சிகள் உடையும்! புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் பேட்டி!