கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் தென்மரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது, மூன்று வார்டன்கள் மற்றும் சில கைதிகள் தொடர்ந்து தாக்கி துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வில், உடலின் பல்வேறு பகுதிகளில் 19 காயங்கள் இருந்ததாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, சபரிவர்மனின் குடும்பத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன் பின்னர், மூன்று சிறை வார்டன்களும் எட்டு கைதிகளும் கைது செய்யப்பட்டனர். தற்போது மூன்று வார்டன்கள் நாங்குநேரி சிறையிலும், எட்டு கைதிகள் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!
இதுவரை இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை விசாரித்து வந்த நிலையில், தற்போது விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கின் கோப்புகள் மற்றும் ஆவணங்கள் இதுவரை நாகர்கோவில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது விசாரணை நடத்தி வரும் காவல்துறையிடமிருந்து அனைத்து ஆவணங்களும் விரைவில் சிபிசிஐடிக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில், சபரிவர்மனின் குடும்பத்தினர் ஏற்கனவே சில முக்கிய சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். குறிப்பாக, உடற்கூறு ஆய்வில் பலத்த காயங்கள் இருந்தபோதிலும், அவைதான் மரணத்திற்கான காரணம் அல்ல என்று குறிப்பிடப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியானால், மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
மேலும், சபரிவர்மனின் செல்போனில் சில முக்கிய தகவல்கள் இருந்ததாகவும், குறிப்பாக சில காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் தகவல்கள் அதில் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், அந்த செல்போனில் இருந்த தகவல்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
எனவே, இனி சிபிசிஐடி விசாரணையில் செல்போனில் இருந்த தகவல்கள், மரணத்திற்கான உண்மையான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் மூலம் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பது விசாரணையில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: “கதற, கதற கட்டி வைத்து அடி... சக கைதிகள் செய்த கொடூரம்”... சிறைக்குள் சபரிவர்மனுக்கு நடந்தது என்ன?