தமிழ்நாட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், தோட்டக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை கற்பிக்க, 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 16,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்களின் பணி தற்காலிகமானது என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 12,000 முதல் 13,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 12,500 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதுடன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக, பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 377-வது வாக்குறுதியாக, உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் 100 நாளில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பகுதி நேர ஆசிரியர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களை பார்ப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. சிறுமியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த நிகழ்வுக்கு நயினார் கண்டனம்..!
ஆசிரியர்களுக்கு வேலை கொடுப்பதற்கு திறன் இல்லாமல், ஆசிரியர்களுக்கு பணி கொடுக்க வழி தெரியாமல் இதுபோல காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தார். ஆதிதிராவிட பள்ளிக்கூடங்களில் பார்த்தோமானால் 30% மாணவர்கள் அங்கு சேரப் போவதில்லை, தமிழ்நாடு முழுக்க உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளை எடுத்து பார்த்தால் 5000 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது என்று தெரிவித்தார். மாற்று அரசாங்கம் நிச்சயம் வரும், தீர்வு கிடைக்கும் என கூறினார்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தைகளுக்கு தொட்டில் கூட இல்லை.. இதுதான் உலகம் போற்றும் மருத்துவமா? நயினார் கண்டனம்..!