தென்னிந்தியாவின் முட்டை உற்பத்தி மையமான நாமக்கல்லில், முட்டை கொள்முதல் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 80 காசுகள் வரை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டை ரூ.5.60-க்கு விற்பனையாகி வருகிறது.
புத்தாண்டு மற்றும் குளிர்காலத் தேவையால் கடந்த வாரம் வரை உச்சத்தில் இருந்த முட்டை விலை, தற்போது திடீர் சரிவைச் சந்தித்துள்ளது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பண்ணைக் கொள்முதல் விலையில் மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.5.60-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் சரிவு கோழிப்பண்ணையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் நாளொன்றுக்குச் சுமார் 6 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பொதுவாகக் குளிர்காலத்தில் வட மாநிலங்களுக்கு முட்டை விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால் விலை உயர்வது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக முட்டையின் நுகர்வும் மற்றும் விற்பனையும் கணிசமாகக் குறைந்துள்ளதே இந்த விலை சரிவுக்கு முக்கியக் காரணம் எனப் பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொங்கல் பண்டிகை நெருங்குவதால், நுகர்வோர் பலரும் காய்கறிகள் மற்றும் பொங்கல் சீர் வரிசைப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், முட்டைத் தேவை தற்காலிகமாகக் குறைந்திருப்பதும் விலையில் எதிரொலிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "சென்னையில் முட்டை ரேட் என்ன? நாமக்கல் முட்டை கொள்முதல் விலை சரிவு! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
ஜனவரி மாதத் தொடக்கத்தில் ரூ.6.40-ஆக இருந்த முட்டை விலை, படிப்படியாகக் குறைந்து தற்போது ரூ.5.60-க்கு வந்துள்ளது. இது குறித்துப் பண்ணையாளர்கள் கூறுகையில், "வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மற்றும் வட மாநிலங்களுக்கான விநியோகம் சீராக இருந்தாலும், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக விலையைத் தற்காலிகமாகக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்றனர். இந்த விலை சரிவு காரணமாகச் சில்லறை விற்பனைக் கடைகளிலும் முட்டை விலை குறையும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். வரும் வாரங்களில் பொங்கல் பண்டிகை முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது, முட்டை விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "பாஜக லீடர்னு சொன்னா விட்ருவாங்களா?" 4.5 கோடி ட்ரேடிங் மோசடி புகாரில் கைதான முக்கிய பிரமுகர்!