நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூன்று குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. தனது மனைவியையும் ஆண் குழந்தையையும் வேறொரு அறையில் பூட்டி வைத்துவிட்டு இந்த கொடூர செயலில் அவர் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் குழந்தைகளின் கழுத்தை அறுத்த தந்தையின் கைகளில் இரத்தம் இல்லை என அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கடன் பிரச்சனைக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நபருக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. காலை முதலே ஒட்டுமொத்த நாமக்கல் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த மூன்று குழந்தைகள் கொலை வழக்கானது தற்போது ஒரு மிகப்பெரிய திருப்பத்தை கண்டுள்ளது.
மங்களபுரம் அருகே உள்ள வேப்பம்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன் நேற்று இரவு உணவு உண்ட பின் மனைவியை தனது ஆண் குழந்தையுடன் படுக்கை அறையில் உறங்க சென்றதாகவும், கோவிந்தராஜ் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியா-மணிலா இடையே நேரடி விமான சேவை.. பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு..!
திடீரென்று அதிகாலை மூன்று மணி அளவில் கோவிந்தராஜ் தனது மனைவி உறங்கி கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டு, ஹாலில் படுத்திருந்த மூன்று பெண் குழந்தைகளான பிரதிக்ஷா, ஸ்ரீ ரிதிகா ஸ்ரீ, தேவஸ்ரீ ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், கோவிந்தராஜின் உறவினர்கள் மங்களாபுரம் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.
அதில், மூன்று குழந்தைகளை அவர் கொல்லவில்லை எனவும் அவர் அவருடைய கைகளிலும் சட்டைகளிலும் எந்த ஒரு இரத்த படிகளும் படிந்து இருக்கவில்லை எனவும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் உள்ள குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும், இதை கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராசிபுரம் காவல் துணை ஆய்வாளர் விஜயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி கோவிந்தராஜன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இருப்பதாகவும், எனவே அவரது தற்கொலையிலும் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து டிஎஸ்பி சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டை உடனடியாக விசாரிப்பதாகவும் தடவியல் நிபுணர்கள் மூலம் அனைத்து தடையங்களும் சேகரிக்கப்பட்டு, சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திக்.. திக்.. நிமிடங்கள்.. திடீரென வெடித்துக் கொட்டிய மேகம்.. பூமிக்குள் புதையும் வீடுகள் பகீர் காட்சிகள்..!