நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில், நீட் தேர்வு, மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா கோரிக்கை மற்றும் அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. இதனால், நாடாளுமன்றத்தில் இன்று முதல் கடும் அரசியல் மோதல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அந்த நோட்டீஸில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டதாக கூறப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல் மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, விதி 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். மருத்துவக் கல்வியை நோக்கமாகக் கொண்ட மாணவர்கள் நீட் தேர்வால் சந்திக்கும் சவால்கள், மனஅழுத்தம் மற்றும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் குறித்து அவசர விவாதம் நடத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் மக்களவையில் தனி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது போலீசார் நடத்தியதாக கூறப்படும் தடியடி சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி, சிஜேபி தலைமையில் நடைபெற்ற மாணவர் பேரணியின் போது டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் சம்பவம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா…! மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..! பணிந்தது பாஜக அரசு..!!