வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் செல்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அருவிகளிலும் தடை:
தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரான்சில் வசிக்கும் இந்தியர்களே உஷார்! போராட்டம் தீவிரம்? தூதரகம் வெளியிட்ட அவசர எச்சரிக்கை!
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பெரும் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளதால் அருவிகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு மட்டும் சுமார் 588 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 90 மில்லி மீட்டர் மழை , பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து இன்றும் அருவியில் இரண்டாவது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கி உள்ளனர்.
கன்னியாகுமரி கள நிலவரம் என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு முதலே பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.இதனால் கோதையாற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்ததை அடுத்து, திற்பரப்பு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அங்கு குளிப்பதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளின் நிலவரத்தை பொதுப்பணித்துறை மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மழையின் நிலவரத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகளில் கூடுதல் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யூடியூபர் ஹரிஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... மற்றொரு யு-டியூபரான ஜேசன் சாமுவேல் கைது...!